மருத்துவ சேவை என்பது மிகவும் புனிதமான சேவையாகும். கடவுள் அனைத்து இடங்களிலும் இருந்து உயிரை காக்க முடியாது என்பதால்தான் தன் சார்பாக மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். அந்த புனிதமான சேவையை வழங்கும் மருத்துவர்களை அனைத்து மக்களும் மதிக்கின்றோம். மருத்துவர்கள் எதிர்பார்க்காத வகையில் தவிர்க்க முடியாமல் நடைபெறும் மருத்துவ சேவை குறைபாடுகளுக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று அனைவரும் விரும்புகின்றோம்.
“நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்கள் வந்ததால்தான் மருத்துவ செலவு அதிகரித்துவிட்டதாகவும், மருத்துவ சேவை குறைபாடு இல்லாமலேயே மருத்துவர்கள் இழப்பீடு வழங்க நிர்பந்தப்படுத்தபடுகின்றார்கள் எனவும், மருத்துவர்களை நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரக்கூடாது” எனவும் தொடர்ந்து மருத்துவர்கள் அறிக்கை விடுகின்றார்கள்.
ஆனால், எப்போதெல்லாம் மருத்துவர்கள் மருத்துவ சேவை எனும் பதத்தில் இருந்து விலகி வியாபர நோக்குடன் செயல்பட்டு அதனால் மருத்துவ சேவை குறைபாடு எற்படும்போது அதை தடுக்கும் விதமாக அல்லது அதற்கு பரிகாரம் வழங்கும் வகையில் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள் இருப்பதில் என்ன தவறு? மருத்துவ சேவை குறைபாட்டில் ஈடுபடும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதில் மருத்துவர்களிடையேகூட எந்தவித மாற்று கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் மருத்து சேவை குறைபாடு உள்ளது என தீர்மானித்து தீர்ப்புகளை விளம்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ சேவை குறைபாட்டை மருத்துவர்கள் மட்டும் அடங்கிய மருத்துவ டிரிபினல் மட்டுமே விசாரிக்க வேண்டும். அதாவது மருத்துவர்களே மருத்துவ குறைபாட்டை விசாரிக்க வேண்டும் என்பதே என்று மருத்துவர்களின் விருப்பமாகும்.
மருத்துவ சேவை குறைபாட்டை விசாரிக்க மருத்துவர்களால்தான் முடியும் என்பது ஒரு சிறு பிள்ளைத்தனமான விவாதமாகும். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பு வழங்குவது என்பது இரு தரப்பினர் வாதத்தின் அடிப்படையில்தான். மருத்துவம் சார்ந்த வழக்குகள் வரும்போது மருத்துவர்களே நேரடியாக வழக்கில் ஆஜர் ஆக முடியும். வழக்கறிஞரை வைத்துதான் வாதம் செய்ய வேண்டும் என்று சட்டம் எங்கும் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர் நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்று தனது வாதத்தை எடுத்து வைக்கும் வகையில் இந்தியாவில் நீதிமன்ற விசாரணை வழி வகை செய்துள்ளது.
மருத்துவர்கள் எதிர்பார்க்கும் வகையில் மருத்துவ டிரிபுனல் அமைந்தாலும், அந்த டிரிபினலின் ஆணையையும் சீராய்வு செய்ய உயர்நிதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இந்தியாவில் எந்தவித பிரச்சனை என்றாலும் கடைசியாக அதை தீர்மானிப்பது மாண்புமிகு நீதியரசர்கள்தான். ஆக, “ மருத்துவ சேவை குறைபாட்டை மருத்துவம் பற்றி அறியாத நீதிபதிகள் தீர்மானிக்கக்கூடாது“ என்று கூறுவது தவறான விவாதம் ஆகும். அவ்வாறான வழிமுறைகள் இந்தியாவில் சாத்தியமே இல்லை.
No comments:
Post a Comment