மாற்றுமுறை ஆவணம் (Negotiable Instrument) என்றால் என்ன?
”பணமாக மாற்றும் வகையிலான மற்றும் பணத்திற்கு பதிலாக மற்றவருக்கு கொடுத்து அது கைமாறி செல்லும் வகையிலான ஆவணமாகும்.”
.
பொதுவாக இந்த ஆவணத்தை ஒருவரிடம் கொடுப்பது மூலமாகவோ (Delivery) அல்லது மேலெழுத்து (Endorsement) மூலமாகவோ இன்னொருவருக்கு அந்த ஆவணத்தின்பால் உரிமையை வழங்கலாம்.
.
மாற்று முறையாவணம் என்பது பற்றி சட்டத்தில் எங்கும் வரையறை செய்யப்படவில்லை என்றாலும் எவையெல்லாம் மாற்று முறை ஆவணம் என்று மாற்றுமுறை ஆவண சட்டம் (இனிவரும் இடங்களில் மஆவ என்று வசதிக்காக குறிப்பிடப்படும்) பிரிவு 13(1) வழங்கபட்டதின் அடிப்படையில் கீழ்கண்டவகைகள் மாற்றுமுறை ஆவணங்களாக அழைக்கப்படுகின்றது.
.
1. கடனுறுதிச் சீட்டு (Promissory Note)
2. காசோலை (Cheque)
3. மாற்று சீட்டு (Bill of Exchange)
சட்டம் மேற்கண்ட மூன்றையும் மாற்று முறை ஆவணங்களாக ஏற்றுக்கொண்டாலும், அவற்றை தவிர பிற சில ஆவணங்களும் மாற்று முறை ஆவணங்கள் எனும் பதத்தில் வரும். உதாரணமாக வடமாநிலத்தில் வியாபரிகள் இடையே புழக்கத்தில் உள்ள “உண்டி“ எனும் ஆவணம்.
மாற்று முறை ஆவணத்தின் உரிமைத்தன்மையை தெரிந்து கொள்வதற்கு முன் சற்று விரிவாக கீழ்கண்ட லத்தீன் சட்ட முதுமொழியை பார்ப்போம்.
Neo dat quad non habat
(No one can convey better title than what he has)
இதை கீழ்கண்டவாறு விளக்குகின்றேன். அ என்பவர் ஆ விடம், அரசு புறம்போக்கு நிலத்தை தவறாக திரித்து கூறி அவர்தான் அந்த நிலத்திற்கு உரிமையாளர் என்று விற்பனை செய்கின்றார். ஆ-யும் அந்த நிலத்தை சுத்த கிரையம் செய்து வாங்குகின்றார். இப்போது ஆ விற்கு அந்த நிலத்தின் உரிமை மூலம் வந்து சேராது. ஏனெனில் மாற்றல் செய்யும் அ-விற்கெ அந்த நிலத்தில் உரிமை மூலம் இல்லாதபோது, அந்த நிலத்தை வாங்கிய ஆ-விற்கு உரிமை மூலம் வந்தடையாது. இதைத்தான் மேற்படி சட்ட முதுமொழியானது சற்று மாறிய வகையில் எடுத்துரைக்கின்றது. அதாவது, யவரொருவரும் தன்னிடம் இருக்கும் உரிமை மூலத்தை விட அதிக உரிமை மூலத்தை மற்றவருக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதாகும்.
.
ஆனால், மேற்படி விதியானது மாற்று முறை ஆவணங்களுக்கு பொருந்தாது. இதுதான் இந்த மாற்று முறை ஆவணங்களின் தனி சிறப்பாகும்.
.
அ என்பவர் “தனக்கு“ (self) என்று எழுதி ரூ.10,000 க்கான முறையாக கையொப்பம் இட்டு ஒரு காசோலை வங்கியில் சென்று பணம் எடுப்பதற்காக செல்லும்போது தொலைத்துவிடுகின்றார். அந்த காசோலையை ஆ என்பர் எடுத்து, ஒரு கடைக்கு சென்று ரூ.10,000 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கிய பிறகு அந்த காசோலையை கடைக்காரர் இ என்பவரிடம் வாங்கிய பொருட்களுக்கு விலையாக கொடுத்து வங்கியியிருந்து பணம் பெற்றுக் கொள்ள சொல்கின்றார். இப்போது இ கையில் இருக்கும் காசோலைக்கு அவர் முற்றிலுமான உரிமையாளர் ஆவார். மேற்படி சட்டமுதுமொழியின் அடிப்படையில் ஆ என்பவருக்கு அந்த காசோலையில் உரிமை இல்லை எனும் பட்சத்தில் இ என்பவருக்கும் உரிமை வராது. ஆனால், காசோலை மாற்று முறை ஆவணமானதால், அந்த காசோலைக்கு ஆ-விற்கு அதன்பால் உரிமை இல்லை என்ற போதிலும், ஆ விடம் இருந்து இ-யானவர் தனது கடையில் நடந்த விற்பனைக்காக காசோலையை பெற்றிருப்பதால், காசோலையின் உரிமை இ –க்கு வந்துவிடும்.
No comments:
Post a Comment