Pages

Wednesday, 28 June 2023

இரத்த பரிசோதனைக்காக லேப்களுக்குச் சென்றால்..... .

 

இரத்த பரிசோதனைச் செய்யும் லேப்களுக்குச் சென்றால், ஒருவருக்கு இரத்தம் எடுக்கும் முன், ஒரு பஞ்சில் ஸ்பிரிட் எடுத்து, இரத்தம் எடுக்கப் போகும் தோல் பகுதியில் துடைப்பார்கள். பின்னர் அந்த இரத்த குழாய் தெரிவதற்காகக் கையுறை அணியாத அவர்களின் விரலால் அந்த இடத்தை அழுத்துவர்கள் (கவனிக்கவும்முதலில் ஸ்பிரிட் வைத்து துடைத்த இடத்தை அவர்கள் விரலால் அழுத்துவார்கள். இப்போது ஏற்கனவே ஸ்பிரிட்டால் துடைத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்) அப்போது அவர்கள் விரல்களில் ஏதாகிலும் கிருமிகள் இருந்தால், இரத்தம் எடுக்க ஊசியால் குத்தபோகும் தோலில் அமர்ந்துவிடும். அந்த இடத்தில் இரத்தம் எடுப்பதற்கான ஊசியைக் குத்தும்போது, தோலில் உள்ள கிருமிகள் இரத்த குழாய்களுக்குச் செல்ல வாய்ப்புண்டு.  ஒருவருக்கு இரத்தம் எடுத்து முடித்தவுடன், இரத்த கசிவினைத் தடுக்க ஊசியால் துளையிட்ட  இடத்தில் பிளாஸ்டர் ஒட்டுவார்கள். அவ்வாறு பிளாஸ்டர் ஒட்டும்போது, ஊசியால் துளையிட்டதால் கசிந்த  இரத்தமானது இரத்தம் எடுப்பவரின் விரல்களில், ஒட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. பின்னர்க் கையுறை அணியாத அதே  விரல்களால், மற்றவருக்கு இரத்தம் எடுக்கும்முன் இரத்த குழாய் தெரிவதற்காக அழுத்துவார்கள். இப்போது அவர்கள் விரல்களில் உள்ள இரத்த கறையானது இரத்தம் எடுக்கப் போகும் மற்ற நபரின் தோலில் அமர்ந்து, அந்த இடத்தில் ஊசி குத்தும்போது, தோலில் அமர்ந்துள்ள இரத்த கறையில் உள்ள கிருமிகள் இரத்தம் எடுக்கும் நபரின் இரத்த குழாய்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.  இதைத் தடுப்பதற்கு என்னதான் தீர்வு? இரத்த மாதிரி எடுப்பதற்கு முன்னால், இரத்தம் எடுப்பவர்கள் ஒவ்வொருவரும்,  ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாகக் கையுறை அணிய வேண்டும்.

.

ஒரு பிரபலமான லேப்பில் யுரின் சாம்பிள் எடுக்கும் பாட்டிலுக்கும் ரூ.10 தனியாகக் கட்டணம் போடுவார்கள். லேப் சார்ஜ் ரூ.1500 மேல் கட்டணம் வந்தாலும் அங்கிருப்பவர்கள் ரூ.5 விலையுள்ள கையுறையை அணியமாட்டார்கள். அடுத்த தடவை நீங்கள் இரத்த பரிசோதனைக்கு லேப்பிற்குச் சென்றால், இரத்தம் எடுக்கும் முன் அவர்களை கையுறை அணிய நிர்பந்தப்படுத்துங்கள். (கையுறை தயாராக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சோம்பறித்தனம் அதை அணிவதில்). கையுறை அணிய மறுத்தால், அங்கு பரிசோதனைச் செய்வது என்பது உங்களுக்கு உடலநலத்திற்குப் பெரிய அளவிலான ஆபத்தாக முடியலாம். இவர்கள் எல்லோரையும் கண்காணிக்கும் அதிகாரம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநருக்கு உள்ளதால், இந்த தவற்றினை அவர்களின் பார்வைக்கு நடவடிக்கை எடுக்க, கொண்டு செல்லுங்கள். மேலும் இவ்வாறு கையுறை அணியாமல் ஒருவருக்கு பரிசோதனைக்காக  இரத்தம் எடுப்பது சேவை குறைபாடாக அமையும். இந்தப் பதிவு இரத்தம் பரிசோதனை செய்யும் லேப்பிற்கு மட்டுமல்ல, இரத்த பரிசோதனைச் செய்யப்படும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு. உங்கள் நண்பர்களின் பார்வைக்கும் இந்த பதிவினை கொண்டு செல்லுங்கள்.

 

No comments:

Post a Comment