Pages

Wednesday, 28 June 2023

சட்டத்தினை போதிக்கும் தன்னார்வ அமைப்புகள்,

 

சட்டம் சார்ந்த தன்னார்வ அமைப்புகள், மற்றும் சட்டத்தினை போதிக்கும் கல்வி அமைப்புகள், அனைத்து சட்டங்களும் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல கற்றறிந்த வழக்கறிஞர்களை கொண்டு மக்களுக்காக சட்ட வகுப்புகளை எடுத்து, மக்களிடையே சட்டம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சியாக நடத்தப்படும் சட்டம் சார்ந்த காணொளி கூட்டத்தில் (Zoom meetings) சமீப காலங்களில் பங்கெடுத்து வருகின்றேன். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையை காணும்போது, நமது மக்கள் சட்டத்தினை அறிய ஆர்வம் காட்டுவதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இதுபோன்ற கூட்டத்தினை நடத்துபவர்களுக்கும் மற்றும் சட்ட வகுப்புகள் எடுப்பவர்களுக்கும் சில பரிந்துரைகள்.

.

சட்ட வகுப்பு எடுப்பவர்களுக்கு...

1) பொது மக்களுக்கு அனைத்து சட்டங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஒரு சட்ட வகுப்பினை ஆரம்பிக்கும் முன்னர், பாடம் எடுக்க இருக்கும் சட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் பயன்பாட்டினை எடுத்துரைக்க வேண்டும்.

2) விரிவுரையை பவர் பாயின்ட் உதவியுடன் எடுத்துரைப்பது என்பது பொதுமக்கள் இலகுவாக குறிப்பு எடுக்க உதவியாக இருக்கும்.

3) அந்த சட்டத்தின் அனைத்து பிரிவுகளை (Sections) பற்றி சிறு விளக்கம் அளிக்க வேண்டும்.

4) அன்றைய தேதியில் ஒரு குறிப்பிட்ட பிரிவை பற்றிய விரிவுரையாக இருந்தால், அதைப்பற்றி விலாவாரியாக எடுத்துரைக்க வேண்டும்.

5) அந்த சட்டம் சார்ந்த சமீபத்திய மாண்புமிகு உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை விவாதிக்க வேண்டும்.

6) அந்த சட்டமானது சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருப்பின், அந்த சட்டத்திலிருந்து என்னென்ன வகையான கேள்விகளை தேர்வில் எதிர்பார்க்கலாம் என்று எடுத்துரைக்க வேண்டும். (இந்த முறையானது, சட்டக்கல்லுாரி மாணவர்களும் இக்கூட்டத்தில் அதிக அளவில் கலந்து கொள்ள வழிவகுக்கும்)

7) அந்த சட்டத்தினை மட்டுமே தெரிந்து கொண்டால் போதுமானதா, அல்லது அந்த சட்டத்தினில் தெளிவு பெற அது சார்ந்த எந்தெந்த சட்டங்களில் புரிதல் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்க வேண்டும்.

.

சட்ட வகுப்பு எடுக்கும் அமைப்புகளுக்கு....

1) சட்ட வகுப்பு எடுத்து முடித்தவுடன், கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கும்போது, அந்த சட்ட வகுப்பு சாராத கேள்விகளை கேட்க அனுமதிக்கக்கூடாது. இதை கேள்விகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு முன்னரே உறுப்பினர்களுக்கு அந்த சட்டப்பகுதி சாராத கேள்விகளை கேட்க வேண்டாம் என்பதை முதலிலேயே கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிவுறுத்திவிடவேண்டும்.

2) சட்டப்பாடம் எடுப்பவரால் உறுப்பினர் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாத நிலையில் மட்டுமே, கலந்து கொள்ளும் மற்ற வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். அவ்வாறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் வழக்கறிஞர்கள் உறுப்பினர் கேட்கும் கேள்விக்கு நேரடியான பதிலை ஒரிரு வாக்கியங்களில் கூறி முடித்து கொள்ள வேண்டுமே தவிர அந்த கூட்டத்தில் அவர் தன்னை முன்னிறுத்த முயற்சி செய்யக்கூடாது.

3) வழக்கறிஞரை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதை தவிர்க்கும் வகையில், இவ்வாறான கூட்டத்தில் கலந்து கொண்டு, இலவச சட்ட ஆலோசனை பெறும் நோக்குடன், பாடத்திற்கு சம்பந்தமே இல்லாத சட்டப்குதிகளில், குறிப்பாக ஒருவரது தனிப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தொடர் கேள்விகளை தொடுப்பவர்களை தொடர்ந்து பேச அனுமதிக்ககூடாது.

4) சட்ட வகுப்புகளை நடத்துபவர்கள் பொதுமக்களுக்கு சட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படவேண்டுமே தவிர தங்களது அமைப்பினையோ அல்லது அந்த அமைப்பின் உறுப்பினர்களையே மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment